கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குமாரமங்கலம்-ஆதனூர் இடையே தடுப்பணை கட்டும் பணி
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குமாரமங்கலம்-ஆதனூர் இடையே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் 330 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்,
கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது மேட்டூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக காவிரியாற்றிலும், உபரி நீரானது கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீரானது அணைக்கரை மதகுகளில் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரிக்கு செல்கிறது. இதுபோக மீதம் உள்ள தண்ணீர் நாகை மாவட்ட கடைமடை பகுதியான கொள்ளிடம் ஒன்றியம் பழையாறு பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் மூலம் தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இருந்து பின்னோக்கி 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக உப்பு நீராக மாறும் சூழல் நிலவி வந்தது. இதனால் இந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறியது. எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரின் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வந்தது.
இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் நாகை மாவட்டம் மணல்மேடு அருகே குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த திட்டத்திற்கான ஆய்வுகள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து நாகை மற்றும் கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அறிவித்தப்படி தடுப்பணை கட்டப்படும் என்று கூறினார். அதன்படி கடந்த மே மாதம் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி ரூ.396 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தடுப்பணை 1064 மீட்டர் நீளமும், 28 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் போக்குவரத்துக்கு ஏதுவாக 12 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த தடுப்பணை பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குமாரமங்கலம்-ஆதனூர் இடையே தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு ராஜவாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் விதமாக கதவணையுடன் கூடிய மதகுகள் அமைக்கப்படும். தற்போது அடித்தள பணிகளுக்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் இருந்தாலும், அதனை ஒரு பொருட்டாக எடுக்காமல், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினாலும், வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதாலும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருவதாலும் தற்போது கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் 330 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
இதனால் விவசாயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் பூர்த்தியாகும். மேலும் வீராணம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது வரையில் 20 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்த தடுப்பணை கட்டும் பணிகள் திட்டமிட்டபடி வருகிற 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரானது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் வீணாக கடலில் கலக்கும் நிலையில் இருந்தது. மேலும் கடல் நீரும் பின்னோக்கி ஆற்றில் உட்புகுவதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வந்தன. தற்போது குமாரமங்கலம்-ஆதனூர் இடையே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டுவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட தாலுகா பகுதிகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
கடலில் இருந்து உப்பு நீர் உட்புகாமல் இருக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும். இதனால் விவசாயிகள், தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகும். கூலி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story