புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - ரங்கசாமி


புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - ரங்கசாமி
x
தினத்தந்தி 19 Oct 2019 11:15 PM GMT (Updated: 19 Oct 2019 11:01 PM GMT)

புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று கிருஷ்ணாநகர், வசந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன், டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வாக்குசேகரிப்பின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி மக்களால் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்தித்து நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம். எங்கள் வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எங்கள் வேட்பாளர் புவனேஸ்வரன் நிலையான எம்.எல்.ஏ.வாக இருப்பார்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் ஊழல் தொடர்பான பிரச்சினைகளை கவர்னர் கிரண்பெடி சுட்டிக்காட்டி உள்ளார். ஏனாமில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். அதை கவர்னர் கிரண்பெடி கண்டித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது கோரிமேடு எல்லைக்கு அரிசி வந்துவிட்டது. அதை கொடுக்க விடாமல் கவர்னர் கிரண்பெடி தடுக்கிறார் என்றனர். ஆனால் அந்த அரிசியை ஏன் இன்னும் வழங்கவில்லை? ஆட்சி அமைந்தபின் 19 மாதங்களுக்குரிய அரிசியை வழங்காதது ஏன்? அப்படி பார்த்தால் ஒவ்வொரு ரேசன் அட்டைதாரருக்கும் அரசு ரூ.12 ஆயிரம் தரவேண்டி உள்ளது.

இந்த தொகுதியில் ஜான்குமார் வெற்றிபெற்றால் புதுவையில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு வரும். புதுவை மக்கள் சீரழியவேண்டியது இருக்கும்.

இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றால் நாங்கள் அனைவருக்கும் இலவச செட்டப் பாக்ஸ் கொடுப்போம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? புவனேஸ்வரன் வெற்றிபெற்றால் 2 மாதத்தில் ரங்கசாமி தலைமையில் ஆட்சிமாற்றம் வரும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story