கடலூரில் கடல் சீற்றம், கடலில் கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் சாவு
கடலூரில் கடல் சீற்றம் காரணமாக கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மீனவர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் தெற்குதெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 48) மீனவர். இவர் தினமும் கட்டுமரத்தில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். வழக்கம்போல ஜானகிராமன் நேற்று முன்தினம் மாலை கட்டு மரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் கரைக்கு திரும்பி வராததால் அச்சம் அடைந்த அவரது உறவினர்கள் ஜானகிராமனை தேடி அலைந்தனர். ஆனால் அவரை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சோனங்குப்பம் கடற்கரையோரம் மீன்பிடி வலை மற்றும் கட்டுமரம் கரைஒதுங்கியது. ஆனால் ஜானகிராமனை காணாததால் அவரது கதி என்னவென்றே தெரியவில்லை?. இதையடுத்து கடலோர கிராமங்களில் ஜானகிராமனை அவரது உறவினர்கள் தேடினர்.
இதற்கிடையே நேற்று மதியம் கடலூர் துறைமுகம் முகத்துவாரம் அருகே ஜானகிராமனின் உடல் கரை ஒதுங்கியதை அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் விரைந்து வந்து ஜானகிராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜானகிராமன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து அவர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story