தீபாவளியை முன்னிட்டு, இனிப்புகள் தயாரிக்க தரமான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் - உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்
தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் தயாரிக்க தரமான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் அறிவுறுத்தி உள்ளார்.
நாகப்பட்டினம்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களை உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு செய்தார். அப்போது பலகாரங்கள் தயாரிப்பதற்கு தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி இனிப்பு மற்றும் காரங்களில் ரசாயன நிறமிகளை தேவையின்றி பயன்படுத்த கூடாது. பயன்படுத்தும் சூழ்நிலை வரும் போது உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்பட்ட நிறமிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்த கூடாது.
பலகாரங்கள் மற்றும் இனிப்புகள் தயாரிக்க தரமான எண்ணெய்கள் மற்றும் நெய்களை பயன்படுத்த வேண்டும். போலி நெய்யை பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்க கூடாது. வெல்லம், சர்க்கரை, கடலை மாவு, அரிசி, சீனி, ரவை, மைதா உள்ளிட்ட அனைத்தும் தரமான மூல பொருட்கள் கொண்டு பலகாரங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
காலாவதியாகாத மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு துறையால் உரிமம் பெற்ற கடைகளில் இருந்து மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.
அதனை வாடிக்கையாளர்களுக்கு தெரியும் இடத்தில் வைக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் உணவு பகுப்பாய்விற்கு மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மாவட்ட கலெக்டர் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆகியோரிடம் உணவு மாதிரி எடுத்து அனுப்பி வைக்கப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் முரணாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் வந்தால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story