குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை: மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 78 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 78 மி.மீ. மழை பதிவானது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதி வழியாக நகர்ந்து செல்ல இருப்பதால் அடுத்து வரும் 4 நாட்கள் வடகிழக்கு பருவமழை வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. இடையிடையே கனமழையாகவும் பெய்தது. இதனால் நாகர்கோவில் நகரப்பகுதியில் சாலைகள், தெருக்கள் அனைத்திலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறுகளான தாமிரபரணி ஆறு, பரளியாறு, வள்ளியாறு, பழையாறு போன்றவற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கால்வாய்களிலும் வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.
இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாகர்ே்காவில் அருேக உள்ள புளியடியில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலையில் மழை வெள்ளம் பெருமளவு தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடியாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
மழையால் அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் 2 வீடுகள் முழுமையாக இடிந்ததாகவும், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்திருப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இந்த மழை நேற்றும் தொடர்ந்தது.
மருங்கூர், குமாரபுரம் தோப்பூர், ராஜாவூர் போன்ற பகுதியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. குமாரபுரம் தோப்பூரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 45.6, பெருஞ்சாணி- 66.8, புத்தன் அணை- 66.8, சிற்றார் 1- 31, சிற்றார் 2- 31, மாம்பழத்துறையாறு- 78, முக்கடல் அணை- 62, பூதப்பாண்டி- 56.2, களியல்- 12.6, கன்னிமார்- 67.2, கொட்டாரம்- 52, குழித்துறை- 15.4, மயிலாடி- 44.2, நாகர்கோவில்- 76.2, சுருளக்கோடு- 57.2, தக்கலை- 58.8, குளச்சல்- 18.6, இரணியல்- 34.6, பாலமோர்- 52.4, ஆரல்வாய்மொழி- 26, கோழிப்போர்விளை- 58, அடையாமடை- 69, குருந்தங்கோடு- 53.2, முள்ளங்கினாவிளை- 19, ஆனைக்கிடங்கு- 7.2 என்ற அளவில் மழை பதிவானது.
இதில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 78 மி.மீ. மழையும், நாகர்கோவிலில் 76.2 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக ஆனைக்கிடங்கு பகுதியில் 7.2 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 565 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 561 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 468 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 370 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 10 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 135 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
Related Tags :
Next Story