நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் - வசந்தகுமார் எம்.பி. பேட்டி
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி பெறுவார் என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை,
மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற எம்.எல்.ஏ.க்களால் மட்டுமே முடியும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் கிடக்கிறது. நாங்குநேரி தொகுதியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்ததால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் புறக்கணித்து விட்டனர். பஸ் வசதி எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகளிடம் நான் போராடி நிதியை பெற்று பாலம், கட்டிடங்கள் கட்டி கொடுத்து உள்ளேன். மேலும் பல்வேறு பாலம், சாலை, கட்டிடங்கள் கேட்டு பலமுறை சட்டசபையில் பேசியும், கோரிக்கை வைத்தும் உள்ளேன்.
தற்போது ஒரு சட்டம் போட்டு உள்ளனர். அதாவது 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8 கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறிஉள்ளனர். இந்த மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்கும்.
தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தை 5 ஆண்டுகள் அ.தி.மு.க. கிடப்பில் போட்டு விட்டது. இதேபோல் பச்சையாற்றில் இருந்து புதிய கால்வாய் அமைத்து 46 குளங்களை நிரப்ப ரூ.25 கோடியில் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
வருகிற 2021-ம் ஆண்டு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. அதற்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை வாக்காளர்கள் அளித்தனர். அதேபோல் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்வார்கள்.
எங்களுக்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தந்து உள்ளது. எனவே நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story