தர்மபுரி நகரில் உணவகங்கள்-கடைகளில் அதிகாரிகள் சோதனை - காலாவதியான பொருட்கள் பறிமுதல்
தர்மபுரி நகரில் உணவகங்கள்-கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி நகரில் பஸ்நிலையங்களில் உள்ள கடைகள், பென்னாகரம் ரோடு, பைபாஸ்ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்பு பலகார கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள், இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதன் பேரில் அந்த கடைகள் மற்றும் உணவகங்களில் தரமான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்த கலெக்டர் மலர்விழி உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் தர்மபுரி நகரில் உள்ள பல்வேறு கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினார்கள். பஸ் நிலையத்தில் உள்ள பலகாரம் விற்பனை செய்யப்படும் கடைகள், உணவகங்களில் நடத்திய சோதனையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணையை பயன்படுத்தி மீண்டும் பலகாரங்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் அங்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று மற்ற பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனையின்போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவை விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த புகையிலை பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் காகிதங்களில் உணவு பொருட்களை வைத்து சாப்பிட வழங்குதல், உணவு பொருட்களை கட்டிதருதல் ஆகிய விதிமீறல்கள் 6 கடைகளில் கண்டறியப்பட்டன.
சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தரமற்ற உணவு பொருட்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story