பள்ளிபாளையம் அருகே, அழகுநிலைய பெண் ஊழியர் மர்ம சாவு - கொலையா? போலீசார் விசாரணை
பள்ளிபாளையம் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மொளசி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி ஷோபனா (29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஷோபனா திருச்செங்கோட்டில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் தனது மகனின் பிறந்தநாளுக்காக துணி வாங்கி வருவதாக கணவர் செந்திலிடம் கூறி விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் ஷோபனா வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் செந்தில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று மீண்டும் தனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு நபர் அழைப்பை எடுத்து செல்போன் பள்ளிபாளையத்தில் சாலையோரத்தில் கிடந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் அங்கு விரைந்து சென்று அந்த நபரிடம் போனை வாங்கி கொண்டு மனைவி ஷோபனாவை தேடி பார்த்தார்.
அப்போது அருகில் உள்ள ஒரு ஓடையில் ஷோபனா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் இது குறித்து மொளசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபனாவை யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story