நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கனிமொழி எம்.பி. பேட்டி


நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2019 11:00 PM GMT (Updated: 20 Oct 2019 8:38 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் சார்பில் மக்களவை சபாநாயகர் தலைமையில் செர்பியாவில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு மற்ற நாடுகளில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி கையாண்டு தீர்வு கண்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தியாவின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்தது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவரின் பிரசாரத்தில் மக்களின் ஆதரவை பார்க்கும்போது, நிச்சயமாக தி.மு.க., காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நம்புகிறேன்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தை பற்றி பேசி உள்ளார். யாரையும் புண்படுத்தும் கருத்துக்களை கூறுவது தவறான ஒன்று. பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்து கூறுவது வரவேற்கத்தக்கது அல்ல.

பா.ஜனதா ஆட்சியில் அன்னிய செலாவணி உயர்ந்து இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் எண்ணிக்கைக்கும், உண்மையில் இருக்கும் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தற்போது இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் வரவேற்கக்கூடியது இல்லை.

இடைத்தேர்தலில் பணம் கொடுப்பதாக வந்த புகார்கள் குறித்து விசாரிக்கட்டும். உண்மை வெளியில் வரட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story