இடி-மின்னலுடன் மழை பெய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
இடி-மின்னலுடன் மழை பெய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் இடி, மின்னல் சமயங்களில் பொதுமக்கள் முற்றிலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்களில் வெளியில் செல்ல நேரும் போது, சிறிய அளவு மின்சாரத்தை உணருதல், உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்த்தல் அல்லது உடல்கூச்சம் ஏற்படுதல் போன்றவை மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும்.
பொதுமக்கள் தங்கள் மீது மின்னல் தாக்காமல் இருக்க உடனடியாக பாதுகாப்பான இடங்களான கட்டிடங்களில் ஒதுங்கி நிற்க வேண்டும். கட்டிடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்கிட வேண்டும். செங்குத்தான மலை முகடுகளில் மின்னல் தாக்குதலின் அபாயம் அதிகம். வெட்ட வெளியில் தனித்த மரங்கள் மட்டும் இருந்தால் கைகளால் கால்களை இறுக்க அணைத்து கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாதவாறு குனிந்து நிலையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பானதாகும்.
மேலும் பொதுமக்கள் நீர் நிலைகளில் இருந்தால் அதனைவிட்டு வெளியில் வந்துவிடவேண்டும். கால்நடைகளை நீர்நிலைகளின் அருகிலும், தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், பலமற்ற மண்சுவர், இடிந்து விழும் நிலையில் உள்ள சுவர்களுக்கு அருகிலும், மரம், மின் கம்பங்கள், இழுவைக் கம்பிகள் போன்றவற்றிலும் மேய்சலுக்காக கட்டக்கூடாது. மின்னல் ஏற்படும் போது தொலைபேசியினை உபயோகப்படுத்தக் கூடாது.
உயர் அழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்ல கூடாது. குறைந்த பட்சம் 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இரும்பு கைப்பிடி சுவர்களை தொடக்கூடாது, இரும்பு கம்பிகளால் ஆன குடை பயன்படுத்தக் கூடாது, இரும்பினால் ஆன பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். கொடிக்கம்பம், தொலைகாட்சி ஆண்டனா, உயரமான குழாய்கள் அல்லது எந்த ஒரு உயரமான உலோக அமைப்புகளுக்கு அருகாமையில் இல்லாமல் இருக்க வேண்டும்.
இடி-மின்னலுடன் மழை பெய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077 எண்ணிற்கு தங்களின் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story