கட்டிடங்களுக்குள் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் - கலெக்டர் ராமன் எச்சரிக்கை


கட்டிடங்களுக்குள் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் - கலெக்டர் ராமன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2019 10:45 PM GMT (Updated: 20 Oct 2019 8:39 PM GMT)

கட்டிடங்களுக்குள் தண்ணீர் தேங்கி ெடங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம், 

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கொசுக்களினால் பரவும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுத்திட, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களின் பயன்படுத்தப்படாத சிமெண்டு கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாமல் உடனடியாக நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் போது அத்தகைய சிமெண்டு கட்டிடங்கள், சிமெண்டு தரைகள், சிமெண்டு மேல் தளங்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும், டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டால் அந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக கொசுக்களினால் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்களை பரவாமல் தடுக்க சேலம் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினரால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள சிமெண்டினால் கட்டப்பட்டுள்ள தொட்டிகளை நன்கு கழுவி சுத்தம்செய்து சுண்ணாம்பினால் உட்புறச்சுவர்களை வெள்ளையடித்து, பின்னர் நீரை சேமிக்க பயன்படுத்த வேண்டும். இதனை வீட்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவரும் தாமாக முன்வந்து, கண்டிப்பாக தொட்டிகளுக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும்.

அனைத்து புதிய கட்டிடங்கள் கட்டும் வீட்டின் உரிமையாளர், கட்டிடம் கட்டும் பொறியாளர் மற்றும் காண்ட்ராக்டர்கள் கட்டுமான பணி நடக்கும் இடங்களில் கண்டிப்பாக தொடர்ந்து நீர் தேங்காதவாறு மேற்பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.

கட்டிடத்தில் கான்கிரீட்டுக்காக நீர் தேக்கி வைக்கும்பொழுது தினமும் ஒருமுறை நீரை வடித்து, மீண்டும் புதிய நீரை கான்கிரீட்டுக்காக தேக்க வேண்டும். மேலும் செப்டிக் ேடங்க் மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் கட்டிட வேலைக்காக நீரை சேமித்து வைக்கும்போது கண்டிப்பாக காற்று புகாதவாறு முழுமையாக மூடிவைக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற இச்சூழலில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மோட்டார் பம்புகள் கொண்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழைக்காலங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர் பாதிப்புகள், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய் வராமல் தடுப்பதற்கும் தங்கள் பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, கட்டிடமில்லாத காலி இடங்களில் புதர் மற்றும் குப்பைகள் இல்லாதவாறு சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த மேற்கண்ட வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story