பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது


பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 20 Oct 2019 10:00 PM GMT (Updated: 20 Oct 2019 8:39 PM GMT)

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற புகழ்பெற்றது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து வரும் மோயாறும் கலக்கும் இடமே பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மொத்த கொள்ளளவு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி, மேல் குந்தா, மேல் பவானி, எமரால்டு ஆகியவை உள்ளன.

இந்த அணையின் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட பகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு மாநகராட்சி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய நகராட்சிகள், பவானிசாகர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மேலும் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள் குடிநீர் வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் கடந்த கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.

கடந்த 18-ந் தேதி மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.82 அடியாகவும், நேற்று முன்தினம் 99.35 அடியாகவும் இருந்தது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 986 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொதுப்பணித்துறை சட்டவிதிகளின்படி பவானிசாகர் அணையில் அக்டோபர் 31-ந் தேதி வரை அதிகபட்சமாக 102 அடி தேக்கலாம். அதற்கு மேல் தேக்கக்கூடாது. ஆனால் நவம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்துதான் 105 அடி வரை தேக்கி வைக்க முடியும். எனவே அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டினால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை தொட்டது. அப்போது அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி வந்தது. அந்த தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை 102 அடியை விரைவில் எட்டிவிடும்,’ என்றார்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவடிவேலு தலைமையில் அதிகாரிகள் பவானிசாகர் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Next Story