தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து 200 சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி முதல் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர்,
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு சென்னை போன்ற வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலைசெய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அனைவரும் ஒரே நேரத்தில் ஊருக்கு செல்வதால் பஸ் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.
எனவே பொதுமக்கள் நலன்கருதி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் முடிவு செய்துள்ளது. வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் கூட்டநெரிசல் காரணமாக பூந்தமல்லிவரை மட்டுமே இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும், காலதாமதத்தை தவிர்க்கவும் வேலூரில் இருந்தும், பிறபகுதிகளில் இருந்து வேலூர் வழியாகவும் சென்னைக்கு இயக்கப்படும் வழக்கமான பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
வேலூரில் இருந்து சென்னைக்கு செல்பவர்கள் பூந்தமல்லியில் இறங்கி அங்கிருந்து டவுன் பஸ்களில் செல்லலாம். அதேபோன்று ஆற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சீபுரம், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி மற்றும் திருத்தணி, திருப்பதி செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வழக்கமாக வேலூரில் இருந்து இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story