கலெக்டரின் செயல்பாட்டை கண்டித்து மனித உரிமை ஆணையத்தில் முறையிட முடிவு
கலெக்டரின் செயல்பாட்டை கண்டித்து மனித உரிமை ஆணையத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறையின் மாநில பொது செயலாளர் பாரி கூறினார்.
திருவண்ணாமலை,
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை இன்று (திங்கட்கிழமை) வழங்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களை சஸ்பெண்டு செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி ‘வாட்ஸ் அப்’பில் தகவல் அனுப்பி உள்ளார். இந்த ‘வாட்ஸ் அப்’ தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று திருவண்ணாமலையில் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் பாரி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், கலெக்டரின் செயல்பாட்டை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநில பொது செயலாளர் பாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் பொருளாதார கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலர் இந்த திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தால் வீடு கட்டி முடிக்க முடியவில்லை என்று இந்த திட்டத்தை ஏற்க மறுக்கின்றனர். சிலர் அஸ்திவாரம் போட்ட பின் கூட வீடு கட்ட பணம் எடுக்க முடியவில்லை என்று திட்டத்தை வேண்டாம் என்று கூறுகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் பணம் மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதில் உள்ள நடைமுறை சிக்கலை கலெக்டரிடம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கூறும் போது, அதுயெல்லாம் எனக்கு தெரியாது என்கிறார். உயர் அதிகாரியாக உள்ளவர் ஒரு திட்டத்தை செயல்படுவதில் உள்ள நடைமுறை சிக்கலை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த திட்டத்தில் சாதனை புரிய வேண்டும் என்ற மத்திய, மாநில அரசின் நிலைபாட்டால் ஏற்படும் பிரச்சினையாகும்.
கலெக்டரின் இந்த செயல்பாட்டை கண்டித்து நாளை (இன்று) ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வது என்றும், நாளை மறுநாள் (நாளை) அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்கள் முன்பு இந்த திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் முறையிடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story