தலை பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு - சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதாக புகார்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணின் தந்தையும் கணவரும் கோரியுள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கொரண்டி கிராமத்தை சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி விஜயலட்சுமி(வயது23). இவர் தலை பிரசவத்திற்காக கடந்த 7-ந் தேதி முஸ்டக்குறிச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 8 மணி ஆகியும் பிரசவம் ஆகாததால் விஜயலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளனர். ஆனாலும் அங்குள்ளோர் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் தாமதித்து வந்துள்ளனர்.
மாலை 4.30 மணி அளவில் மல்லாங்கிணறில் இருந்து வேனை வரவழைத்து முஸ்டக்குறிச்சியில் இருந்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விஜயலட்சுமியை அனுப்பி வைத்துள்ளனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மாலை 6 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு இரவு 7 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனாலும் குழந்தை உயிரிழந்து விட்டது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மிகுந்த போராட்டத்துக்கு பின் தாயின் உயிரை காப்பாற்றி உள்ளனர். தாமதமாக வந்ததால் தான் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என விஜயலட்சுமியின் கணவரிடமும் பெற்றோரிடமும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயலட்சுமி இன்னும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே உள்ளார்.
முஸ்டக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களிடம் நாங்கள் உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க கோரியும் அவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமலும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க தாமதம் செய்ததாலும் குழந்தை இறந்து விட்டதாக விஜயலட்சுமியின் தந்தை செல்வமும் கணவர் லிங்கமும் புகார் கூறியுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மேலும் முஸ்டக்குறிச்சியில் ஆவியூரை சேர்ந்த ஒரு பெண் இதே போல் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்பழனிசாமியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக எவ்வித புகாரோ தகவலோ இதுவரை வரவில்லை. எனினும் முஸ்டக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story