அரிச்சல்முனை கடற்கரையில் சேதமான தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணி தீவிரம்
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சேதமான தடுப்பு சுவரை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பாலும்,கடல் அலைகளின் வேகத்தாலும் ஏற்பட்ட கடல் அரிப்பால் அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதமானது. இதனை சீரமைக்கும் பணி நேற்று காலை முதலே தீவிரமாக நடைபெற்றது.சேதமான தடுப்பு சுவர் கீழே விழாமல் இருக்க லாரி மூலம் கற்கள் அங்கு கொண்டுவரப்பட்டு சேதமான தடுப்புசுவரையொட்டி கொட்டப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தடுப்பு சுவர் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் அரிச்சல்முனை வரை செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் கம்பிப்பாடு கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதனால் அரிச்சல்முனை சாலை சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தடுப்புச்சுவர் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்பு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரை வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story