ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் - கோவில்பட்டியில் மீட்பு
ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகனை போலீசார் கோவில்பட்டியில் மீட்டனர்.
மதுரை,
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் பார்த்தீபன்(வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரி. இந்தநிலையில், நேற்று முன்தினம் நண்பர்களை சந்திப்பதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த ராஜூ, அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். மேலும் பார்த்தீபனின் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரித்தார்.
இதற்கிடையே ராஜூவின் செல்போனில் பேசிய மர்மநபர், பார்த்தீபனை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் பார்த்தீபனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜூ, இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். மேலும், அவரது செல்போனில் பேசிய எண் குறித்தும் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, காணாமல் போன பார்த்தீபனை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் பார்த்தீபன், கோவில்பட்டியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரை மீட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பார்த்தீபனை கடத்தி சென்றது யார் என விசாரித்து வருகின்றனர். பார்த்தீபனிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story