மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டம் பகுதியில் விடிய விடிய கன மழை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + Heavy rains in the area dawn to dawn Marthandam Kuzhithurai Thamirabarani river flooding

மார்த்தாண்டம் பகுதியில் விடிய விடிய கன மழை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மார்த்தாண்டம் பகுதியில் விடிய விடிய கன மழை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மார்த்தாண்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திக்குறிச்சி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
குழித்துறை, 

மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை நேற்று காலையிலும் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குழித்துறையில் உள்ள தடுப்பணை மீது 3 அடி உயரத்திற்கு ேமல் வெள்ளம் பாய்ந்து ஓடியது. இதனால், தடுப்பணை மீது இருசக்கர வாகனங்கள் செல்லவும், பொது மக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி- சிதறால் மலைக்கோவில் சாலையில் வள்ளக்கடவு பகுதியில் சுமார் 1½ அடி உயரத்துக்கு மேல் மழைவெள்ளம் தேங்கியது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிதறால் மலை கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், திக்குறிச்சி மகா தேவர் கோவிலுக்கு சென்றவர்கள் மற்றும் முந்திரி ஆலை, செங்கல்சூளைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

திக்குறிச்சி, ஞாறாம்விளை பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளை திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த குழந்தைகள், பெண்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

வெள்ளம் சூழ்ந்த இடங்களை பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, விளவங்கோடு தாசில்தார் புரந்திரதாஸ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவர்களிடம் அந்த பகுதி மக்கள் மழை காலங்களில் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் முறையிட்டனர்.

இதையடுத்து, உதவி கலெக்டர் சரண்யா அரி திக்குறிச்சி, ஞாறாம்விளை பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை உடனடியாக வெளியேற்றுமாறும், இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காணும் வகையில் வடிகால் வசதி செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை, பேச்சிப்பாறை போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. மலையோர பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறுவர் நீச்சல் குளம், கல்மண்டபம் ஆகியவற்றை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.

இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் அருவி அருகே யாரும் செல்லாதவாறு கண்காணித்தனர்.

தக்கலை அருகே பரைக்கோடு, கொன்னைவிளையை சேர்ந்தவர் தங்கம் (வயது 47). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு தங்கம் அவரது மகன் பாலகுமரன் (22) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் அந்த பகுதியில் பெய்த கன மழையில் வீட்டின் சமையல்அறை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. தூங்கி கொண்டிருந்த தங்கமும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதுபோல், குழிக்கோடு, கோழிப்போர்விளையை சேர்ந்தவர் தவமணி (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது பெய்த மழையால் வீட்டின் பின்பகுதி இடிந்து விழுந்தது. உடனே, வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடினர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

கன மழையால் வள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வில்லுக்குறி அருகே புலியூர்குறிச்சி பகுதியில் வயல்வெளி மற்றும் வாழை ேதாட்டங்களுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்தது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் மற்றும் வாழைகள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் வாழை ேதாட்டங்களில் வெள்ளம் புகுந்தது. மேலும், உம்மறக்கல் பகுதியில் சாலையில் வெள்ளம் தேங்கி நின்றதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

கொல்லங்கோடு பகுதியில் பெய்த கனமழையால் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

குளச்சல் பகுதியில் பெய்த கனமழையால் ஏ.வி.எம். கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குளச்சல் ஜிம்மா பள்ளி வாசல் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மோட்டார் மூலம் வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபோல், நேற்று அதிகாலையில் மழை பெய்ததால் பெரும்பாலான கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற ஒருசில மீனவர்களும் தொடர்ந்து முன்னேறி செல்ல முடியாமல் பாதியில் கரை திரும்பினர். இதனால், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு சந்தையில் மீன்வரத்து குறைந்து மீன் விலை உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது. குண்டாறு, ராமநதி அணைகள் நிரம்பி வழிகின்றன.
2. கடந்த 5-ந் தேதி சூறாவளி காற்றுடன் மழை: மும்பையில் ரூ.500 கோடி சேதம் - உடனடி நிவாரணம் வழங்க பிரதமரிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை
மும்பையில் ரூ.500 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே மத்திய அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்தார்.
3. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை:நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
4. தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
5. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா? பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்
டேபிள் டாப் விமான நிலையங்களில் ஓடுதளத்திற்குள் விமானத்தை நிறுத்த முடியாவிட்டால், அதை மீறி விமானம் ஓடுவதற்கு இடம் இல்லை என்பது ஆபத்தான விஷயம்