நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி காந்தியவாதி மனு அளித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 260 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எம்.கே.நகரை சேர்ந்த நாகமுத்து என்பவர் கொடுத்த மனுவில், நானும் எனது மனைவியும் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறோம். நாங்கள் ஒரு செங்க சூளை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் வாங்கினோம். ஒவ்வொரு இடமாக மாறி, மாறி வேலை செய்யும்போது, அந்த முன்பணம் தற்போது வளர்ந்து திருக்கோகர்ணத்தில் உள்ள ஒருவரது செங்கல் சூளைக்கு வரும்போது, கடந்த காலங்களில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் வாங்கப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் என கணக்கிடப்பட்டு உள்ளது.
நாங்கள் செங்கல் சூளை உரிமையாளர் ஒருவரிடம் கொத்தடிமையாக விற்பனை செய்யப்பட்டு, வேலை செய்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களிடம் கடுமையாக வேலைகளை வாங்கிக்கொண்டு, மிரட்டி கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் நாங்கள் மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குடிசையில் வசித்து வருகிறோம். மேலும் எங்களை வேலை பார்க்கும் இடத்தில் உள்ள குழாய் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகளுடன் நடத்தி வருகின்றனர். எனவே எங்களை கொத்தடிமையாக நடத்துபவரிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
கூட்டத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை, அனைத்து வெள்ளாளர் பேரினத்தார் கூட்டமைப்பு, வெள்ளாளர் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில், ஒரு சில ஆண்டுகளாக வெள்ளாளர் மற்றும் வேளாளர் பட்டத்தை உரிமை கொண்டாட பல குறுக்கு வழிகளை கடைபிடித்து, அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை வேலை பாதைக்கு திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். அரசியலுக்காகவும், ஓட்டு வங்கிக்காகவும் அரசை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்கின்றனர். இதற்கு ஒருபோதும் அரசு செவிசாய்க்க கூடாது. எனவே எங்களது வெள்ளாளர் மற்றும் வேளாளர் வேறு சாதியினர் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.
விராலிமலை தாலுகா கொடும்பாளூரை சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள சத்திரம் ஊரணியை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த 2017-ம் ஆண்டு நம்பவர் மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தொடர்ந்து நான் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி விராலிமலை தாசில்தார் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸில் ஊரணி ஊராட்சி பகுதியில் வருவதால் வட்டார வளர்ச்சி அதிகாரி கொடுக்கும் தேதிக்குள் தாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது. நோட்டீஸ் வழங்கப்பட்டு 3 மாத காலம் ஆகியும், இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளேன். எனவே நான் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
Related Tags :
Next Story