மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது + "||" + Murder in a counterfeiting dispute The auto driver head got stuck Teenager arrested with husband

கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது

கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது
கள்ளக்காதல் தகராறில் கொலையான ஆட்டோ டிரைவரின் துண்டிக்கப்பட்ட தலையும் சிக்கியது. இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி, கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,

சென்னை பாடி கலைவாணர் நகரில் வசித்து வந்தவர் சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ்(வயது 31). இவர் மீது கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதே பகுதியில் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.


சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ், இங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு தனது தாய் கலாவுடன் புழல் காவாங்கரை பகுதியில் குடியேறினார். ஆனால் அதன்பிறகும் பாடி கலைவாணர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

தலை துண்டித்து கொலை

கடந்த 14-ந்தேதி முதல் சுரேஷ் மாயமானார். முதலில் அவர், சவாரிக்கு வெளியூர் சென்றிருக்கலாம் அல்லது பழைய வழக்கில் போலீசார் பிடித்து வைத்திருக்கலாம் என அவரது தாயார் கலா நினைத்து இருந்தார். ஆனால் தனது மகனை எங்கு தேடியும் கிடைக்காததால் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ், கடைசியாக பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த ஜெயக்கொடி(34) என்பவருடன் சென்றது தெரிந்தது.

ஜெயக்கொடியை பிடித்து விசாரித்தபோது, அவர்தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் அருகே சுரேசை தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, உடலையும், தலையையும் தனித்தனியாக வீசியது தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு விளாங்காடுபாக்கத்தில் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுரேசின் தலையில்லாத உடலை மட்டும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலையை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் அதே பகுதியில் தேடியபோது சுரேசின் துண்டிக்கப்பட்ட தலையும் சிக்கியது. அதையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கொரட்டூர் போலீசார் கூறியதாவது:-

பாடி கலைவாணர் நகரை சேர்ந்த ஜெயக்கொடி, சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் கார்த்திகா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுரேஷ் ஓட்டிவரும் ஆட்டோ ஸ்டாண்ட் அருகேயே கார்த்திகா டிபன் கடை நடத்தி வந்தார்.

இதனால் கார்த்திகாவுக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தனர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. சுரேஷ், போதையில் அடிக்கடி கார்த்திகா வீட்டுக்கு சென்று அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

14-ந்தேதி இரவும் போதையில் கள்ளக்காதலி கார்த்திகா வீட்டுக்கு சென்ற சுரேஷ், அவரை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. வீட்டில் இருந்த ஜெயக்கொடி, இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுரேசை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

வீட்டிலேயே சுரேசை கயிற்றால் கட்டி வைத்தார். பின்னர் தனது நண்பர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்த ஜெயக்கொடி, காயம் அடைந்த சுரேசை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதாக ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

சிறிதுதூரம் சென்றதும், அங்கு காருடன் தயாராக நின்ற தனது நண்பர்களான புழல் காவாங்கரையை சேர்ந்த ராஜா(23), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரகாண்டன்(21) ஆகியோருடன் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த சுரேசை காரில் ஏற்றி செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் கொண்டு சென்றனர்.

அங்கு சாலையோரம் புதர்மண்டி கிடந்த இடத்தில் வைத்து சுரேசை தாக்கினர். பின்னர் கத்தியால் சுரேசின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க அவரது தலையை துண்டித்து உடலை ஒரு பகுதியிலும், தலையை அங்கிருந்த கால்வாயிலும் வீசிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுரேசின் கள்ளக்காதலி கார்த்திகா, அவருடைய கணவர் ஜெயக்கொடி மற்றும் அவரது நண்பர்களான ராஜா, சுந்தரகாண்டன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.