விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு: பா.ம.க.-தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு இடையே மோதல்


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு: பா.ம.க.-தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு இடையே மோதல்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:30 AM IST (Updated: 22 Oct 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க.- தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கிடையே இடையே மோதல் ஏற்பட்டது. நடுரோட்டில் மோதிக்கொண்ட இவர்கள் சட்டையை கிழித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் எதிர் கொண்டது. நேற்று வாக்குப்பதிவு நடந்த போது, வாக்குச்சாவடி மையங்களில் அ.தி.மு.க. மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வாக்குச்சாவடி முகவர்களாக செயல்பட்டனர்.

அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம் கல்யாணம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தின் அருகில் தே.மு.தி.க.வினர் பூத் அமைத்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த பா.ம.க. பிரமுகர் ஒருவர், தே.மு.தி.க. பிரமுகர் ஒருவரிடம் சென்று உங்கள் கட்சியினர் சரியான முறையில் தேர்தல் பணியை செய்யவில்லை என்றும் சரியான முறையில் பணி செய்து வாக்கு சேகரிக்கும் படியும் கூறி திட்டியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தே.மு.தி.க. பிரமுகர், அந்த பா.ம.க. பிரமுகரை கையால் தாக்கினார். பதிலுக்கு பா.ம.க. பிரமுகர், அந்த தே.மு.தி.க. பிரமுகரின் சட்டையை பிடித்து இழுத்து கிழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த தே.மு.தி.க.வினர், அந்த பா.ம.க. பிரமுகரிடம் தகராறு செய்து அவரை திட்டி தாக்கினர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பா.ம.க., தே.மு.தி.க. கட்சியினர் வாக்குச்சாவடி மையத்துக்கு அருகே நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கி, சட்டையை கிழித்துக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story