மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்த வண்ணம் இருந்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான இடங்களில் தேங்கியது. பெரும்பாலான சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.
கடலூரில் நேற்று காலையிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குடைபிடித்த படியும், மழை கோட்டு அணிந்த படியும் சென்றதை காண முடிந்தது. இந்த மழை நேற்று மாலை வரை விட்டு, விட்டு பெய்த படி இருந்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். தீபாவளிக்காக தற்காலிகமாக கடைகள் வைத்திருப்போரும் பொருட்களை விற்க முடியாமல் அவதி அடைந்தனர்.
அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அதேபோல் தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்து கிடப்பதால் மழைநீர், கழிவு நீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சியில் விருத்தாசலம்-மங்கலம்பேட்டை சாலையில் உள்ள திருச்சி-சென்னை ரெயில்வே பாதையை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் செம்பளாக்குறிச்சி, சித்தேரிக்குப்பம், கவணை, பண்டாரங்குப்பம் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்கள், யாருக்கும் பயன் இல்லாத இந்த சுரங்கப்பாதையை மூட வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு தாசில்தார் கவியரசு, இதுதொடர்பாக ரெயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்த பட்சமாக கீழ்செருவாயில் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 21.08 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மே.மாத்தூர் - 45
பெலாந்துறை - 40.80
வேப்பூர் - 38
காட்டுமயிலூர் - 36
குப்பநத்தம் - 29.40
விருத்தாசலம் - 25.40
வானமாதேவி - 25
குறிஞ்சிப்பாடி - 24
அண்ணாமலைநகர் - 21.60
லால்பேட்டை - 21
கடலூர் - 18.90
பண்ருட்டி - 17
காட்டுமன்னார்கோவில் - 16.30
புவனகிரி - 16
ஸ்ரீமுஷ்ணம் - 11.10
சேத்தியாத்தோப்பு - 5
பரங்கிப்பேட்டை - 3
Related Tags :
Next Story