திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி - நிதிநிறுவன அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி - நிதிநிறுவன அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 21 Oct 2019 10:45 PM GMT (Updated: 21 Oct 2019 6:32 PM GMT)

திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்ததாக நிதிநிறுவன அதிபர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மேட்டுப்பட்டி, ராமர்பிள்ளை தோட்டம், பாரதிபுரம், குறிஞ்சிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, திண்டுக்கல்லை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் ஒருவர், ஏலம், தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், இந்த சீட்டுகளில் சேருபவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வட்டியாக சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தார். அதை உண்மை என நம்பிய நாங்கள் அவரிடம் ஏலம் மற்றும் தீபாவளி சீட்டுகளில் சேர விருப்பம் தெரிவித்தோம்.

பின்னர் அவர் கூறியபடி வாரந்தோறும் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை கொடுத்து வந்தோம். நாங்கள் பணம் கொடுத்ததற்காக ஏலச்சீட்டுக்கும், தீபாவளி சீட்டுக்கும் தனித்தனியாக ரசீது, கணக்கு புத்தகங்களை நிதிநிறுவன அதிபர் வழங்கினார். இதனால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஏலம், தீபாவளி சீட்டுகளுக்கான தொகை செலுத்தும் கால அவகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து நாங்கள் செலுத்திய பணத்தை நிதிநிறுவன அதிபரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அவருடைய அலுவலகத்துக்கு சென்றோம். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றோம். அப்போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

பின்னர் அவருடைய வீட்டுக்கு சென்றோம். அங்கும் அவர் இல்லாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அப்போது தான் அவர், பண மோடி செய்தது எங்களுக்கு தெரியவந்தது. நாங்கள் அனைவரும் அவரிடம் ரூ.3 கோடி வரை ஏலம், தீபாவளி சீட்டுக்காக கொடுத்திருக்கிறோம். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கோரி போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு அளிக்க வந்தோம் என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து அவர்களில் சிலரை மட்டும் போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளிப்பதற்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகார் மனு அளித்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Next Story