கும்பகோணம் கோவில் தேருக்காக சிங்கம்புணரியில் உருவாகும் பிரமாண்ட வடங்கள்
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்காக சிங்கம்புணரியில் பிரமாண்ட வடங்கள் உருவாகி வருகின்றன. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தென்னை விவசாயம் முக்கியமானது. மேலும் தென்னை சார்ந்த இதர தொழில்களும் அப்பகுதியில் சிறப்பாக நடைபெறுகின்றன.
குறிப்பாக தென்னை நார் கயிறு உற்பத்தியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். கயிறு தயாரிக்கும் தொழிலை பாரம்பரியமாக சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருபவர்களும் உள்ளனர்.
தற்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்காக, சிங்கம்புணரி பாரம்பரிய கயிறு உற்பத்தியாளர்களிடம் பிரமாண்டமான வடங்கள் உருவாக்கும் பணி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒரு அடி சுற்றளவில், சுமார் 100 மீட்டர் நீளம் உள்ள வடங்கள் இரண்டும், 18 அங்குல சுற்றளவுடன் 175 அடி நீளம் கொண்ட வடங்கள் இரண்டும் என மொத்தம் 4 வடக்கயிறுகள் உருவாகி வருகின்றன.
தினமும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒருங்கிணைந்து தயாரிக்கப்படும் இந்த தேர் வடங்களானது, 7½ டன் தென்னை நார் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
ஆண்கள், பெண்கள் இணைந்து இரவு-பகலாக உருவாக்கப்பட்ட இந்த வடக்கயிறுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதனை ஒருசேர உருட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த வடக்கயிறு தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் பிச்சை குடும்பத்தினர் கூறியதாவது:-
சிங்கம்புணரி தென்னை நார் கயிறு மிகவும் பிரபலமானது. இங்கு முழுக்க முழுக்க தென்னை நாரைக்கொண்டே கயிறு தயாரிப்பது சிறப்புடையது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டத்துக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் தேர் வடம் தயாரித்தோம். தற்போது மீண்டும் அந்த கோவில் நிர்வாகம் வடம் தயாரிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த பணியை இரவு-பகலாக 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து செய்து வருகிறோம்.
இன்னும் சில நாட்களில் இந்த பணி நிறைவு பெறும். இறைவனுக்கான பணியில் நாங்களும் இணைவதால் மிகவும் மன நிறைவாக செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story