மழை வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம்: நாகர்கோவிலில் நடுவழியில் ரெயில் நிறுத்தம் - பயணிகள் அவதி
மழை வெள்ளத்தில் தண்டவாளம் மூழ்கியதால் நாகர்கோவிலில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்யத்தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய, விடிய பெய்தது. அதிகாலை சமயத்தில் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் குமரி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழை வெள்ளம் புகுந்தது. பல சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
இதேபோல இரணியலுக்கும், வீராணி ஆளூருக்கும் இடைப்பட்ட பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் மின்சார ரெயில் என்ஜின்களுக்கான மின்சாரமும் தடைபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்ேவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரெயில் ஒழுகினசேரி ெரயில்வே பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது, என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடுவழியில் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தண்டவாளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு, மின் வினியோகம் சீரானதும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீண்டும் புறப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு இயக்கப்பட்டது. மேலும் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
இந்த சம்பவத்தால், நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி செல்லும் ரெயில் வழக்கமாக தினமும் 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால் நேற்று இந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு பிறகு புறப்பட்டது.
Related Tags :
Next Story