குத்தாலம் அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம், தங்க-வைர நகைகள் கொள்ளை
குத்தாலம் அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் மற்றும் தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்,
நாகை மாவட்டம, குத்தாலம் அருகே தேரழந்தூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 65). இவர், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது இவர், குத்தாலத்தில் கியாஸ் ஏஜென்சி மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை முத்துக்குமார் தனது, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குத்தாலத்தில் தான் நடத்தி வரும் தனது நிறுவனங்களுக்கு சென்றார்.
இரவு 10.15 மணி அளவில் முத்துக்குமார் தனது வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.13 லட்சம், ரூ.7 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ், 8 பவுன் நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போய் இருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாகையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
முத்துக்குமார் குடும்பத்துடன் வெளியில் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் அவரது வீட்டுக்கு வந்து வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டின் பீரோவில் இருந்த பணம், தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம்-நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story