அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் கிராமத்தினர் மனு
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கிராம மக்கள் அடிப்படை வசதி கோரி மனுக்கள் கொடுத்ததுடன் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கிராம மக்கள் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர் ரோசல்பட்டி கிராமத்தில் என்.டி.முருகன் நகரில் வசிக்கும் மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் என்.டி.முருகன் நகர் பகுதியில் உள்ள 5 தெருக் களில் வசித்து வருகிறோம். இந்த தெருக்களில் சாலை வசதி, கழிவு நீர்கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. மழைநீர் மற்றும் கழிவுநீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரமற்ற முறையில் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் பாம்புகளும், விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்து அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது குறித்து கடந்த 18-ந்தேதி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள 5 தெருக்களில் 3-வது தெருவில் மட்டும் சிமெண்டு கற்கள் பதிப்பு, கால்வாய் அமைத்தல் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கு காரணம் அந்த பகுதியில் வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர் ஒருவர் பணிபுரிந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி கேட்டதற்கு தேவைப்பட்டால் நீங்களும் பஞ்சாயத்து அதிகாரியிடம் சென்று பணம் கொடுத்து வசதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலை உள்ளது. ஒரே பகுதியில் வசிக்கும் மக்களிடையே பாரபட்சம் காட்டும் நிலை உள்ளது. மேலும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கேட்டால் இழிவாக பேசும் நிலையும் உள்ளது.
அந்த பகுதியில் தற்போது நல்ல தண்ணீர் ஓடையில் கழிவு நீர் கால்வாய் இணைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்கள் பகுதிக்கு பாரபட்சம் இல்லாமல் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராஜபாளையம் கே.தொட்டியபட்டி கிராமத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் அருகே உள்ள கே.தொட்டியபட்டி கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். பாதிக்கப்பட்ட எங்கள் ஒருவருக்கும் சரிவர வீட்டு வசதி, பராமரிப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் அனைத்து வீடுகளும் ஒழுகி தண்ணீர் நிரம்பி வழிகிறது. அதே போல் எங்கள் கிராமத்தில் தெருக்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்திருக்கிறது. கண்மாய் அருகில் இருப்பதால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தெருக்களுக்குள் வருகிறது. குடிநீர் வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் பெண்களுக்கு சுகாதார வளாகமும் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகரில் உள்ள பாலவநத்தம் தெற்குபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலவநத்தம் தெற்குபட்டி அருந்ததியர் தெருவில் வசித்து வரும் எங்களுக்கு மயானம் அமைத்து தரப்பட்டும் இதுவரை அதற்கு பாதை அமைத்து கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இனியும் தாமதிக்காமல் மயானத்திற்கு பாதை அமைத்து கொடுப்பதுடன் மற்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
காரியாபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம் யூனியன்களில் உள்ள 11 கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 11 கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு இதுவரை ஓய்வூதியமும் பணி கொடை தொகையும் வழங்கப்படாமல் உள்ளதால் இவர்களுக்கு உடனடியாக பணி கொடை தொகையும், ஓய்வூதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமுறை ஒழுங்கு விழிப்புணர்வு குழுவினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story