சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்
சிதம்பரத்தில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பேட்டை, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அம்பேத்கர் நகர் பகுதி மக்களின் வசதிக்காக இதுவரை சாலை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மண் சாலை சேறும் சகதியுமாக மாறி, தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நேற்று காலை அவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்த னர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அவ்வழியாக சென்று வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story