ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பணியிடங்களை நிரப்புவது குறித்து பதில் அளிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பணியிடங்களை நிரப்புவது குறித்து பதில் அளிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பணியிடங்களை நிரப்புவது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களுக்கான பணியிடங்கள் அதிகமாக உள்ளன. மதுரை மாநகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குழந்தை-மகளிருக்கான சுகாதார நிலையங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அரசு டாக்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதில் சில டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். மாநகராட்சி மருத்துவமனைகளில் ஒரு டாக்டர் கூடுதலான மருத்துவமனைகளை கவனிக்கும் அவல நிலை உள்ளது. ஆபரேஷன் தியேட்டர் இருந்தாலும் அதில் பணியாற்ற போதிய மருத்துவ பணியாளர்களும் இல்லை.

இதனால், பெரும்பாலும் மக்கள் தனியார் மருத்துவமனைகளை தேடி செல்கிறார்கள். ஸ்கேன் மற்றும் இதர பல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளது. கடந்த மாதம் 14-ந்தேதி மதுரையில் 22 வயது இளம்பெண் பிரசவம் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், அப்பெண் பலியானார். அந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றும் நிலை உள்ளது.

கடந்த 11-ந்தேதி அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பணியிடங்களை நிரப்பக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பவும், இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், தமிழகத்தில் உள்ள கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்புவது குறித்தும், இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியில் இருப்பது குறித்தும் பதில் அளிக்க சுகாதார மற்றும் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story