திருப்பூர் 1-வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


திருப்பூர் 1-வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 1-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனி பகுதிகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 1-வது மண்டல செயலாளர் செல்வராஜ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அனைவரும் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனி கிழக்கு பகுதி ரேஷன் கடை வீதியில் உள்ள 3 ஆழ்குழாய் கிணறுகளும் பழுதடைந்து விட்டது. மேலும் கியாஸ் கம்பெனி வீதி, வீரப்பசெட்டியார் நகர் வீதியிலும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. அந்த பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது.

இதேபோல் தண்ணீர்பந்தல் காலனி பஸ் நிறுத்தம் பின்புறம் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வருவதுடன், அந்த பகுதியில் உள்ள சில வீதிகளில் சாக்கடை கால்வாய் உடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே உடனடியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story