இடைத்தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளை கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


இடைத்தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளை கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2019 4:00 AM IST (Updated: 22 Oct 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

இடைத் தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டரும், சீனியர் போலீஸ் சூப்பிரண்டும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி, 

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக 21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நிலவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குப்பதிவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இருவருமே ஹெல்மெட் அணிந்து இருந்தனர்.

அப்போது கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குப்பதிவு நடந்த பூத்களுக்கு நானும், சீனியர் போலீஸ் சூப்பிரண்டும் மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டோம். அங்கு செய்யப்பட்டிருந்த வசதிகள் குறித்து ஆய்வு செய்தோம். மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்தள வசதி, அவர்களை அழைத்துசெல்ல சக்கர நாற்காலி, உதவிக்கு தன்னார்வலர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

காங்கிரஸ் வேட்பாளர் பரிசு வழங்க டோக்கன் கொடுப்பதாக புகார்கள் வந்தது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

Next Story