திருவள்ளூர் அருகே வேன்-லாரி மோதல்; 18 பெண்கள் காயம் டிரைவர்கள் தப்பி ஓட்டம்


திருவள்ளூர் அருகே வேன்-லாரி மோதல்; 18 பெண்கள் காயம் டிரைவர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2019 3:28 AM IST (Updated: 22 Oct 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி வேன், லாரி நேருக்கு நேர் மோதியதில் 18 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி டிரைவர்கள் தப்பி ஓடினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தனியார் கம்பெனியில் பணி முடித்த திருவள்ளூர் மற்றும் பிரயாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெண்கள் 18 பேர் நேற்று மாலை வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த வேனை பிரயாங்குப்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது, எதிரே பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அந்த வேனில் பயணம் செய்த பிரயாங்குப்பத்தை சேர்ந்த பரமேஸ்வரி (25), சசிகலா (32), ஷீபா (35), பிரேமா(20), மாதவி (25), பரிமளா(35), சசிகலா நேரு(36), கற்பகவல்லி (26), ரேகா (30), அமுல் ராணி (30), ஸ்டெல்லா மேரி (40) உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து, தனியார் கம்பெனி வேனை ஓட்டி வந்த டிரைவர் மாரி மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story