மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் 50 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை


மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் 50 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை
x
தினத்தந்தி 22 Oct 2019 12:57 AM GMT (Updated: 22 Oct 2019 12:57 AM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தோ்தல் நேற்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்தது. மாநில தலைநகரான மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 334 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் சாரல் மழை காரணமாக காலை நேரத்தில் மும்பையில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது. மதியம் 12 மணி வரை ஒருவர், இருவராகவே வந்து வாக்களித்து சென்றனர். அதன்பிறகு வாக்குப்பதிவு ஓரளவு விறுவிறுப்பு அடைந்தது.

மும்பை பாந்திரா, வெர்சோவா, ஜூகு உள்ளிட்ட பகுதிகளில் சினிமா நட்சத்திரங்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனா். அந்த அளவுக்கு வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சினிமா நட்சத்திரங்கள் நிறைந்து உள்ள பாந்திரா மேற்கு பகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 38.81 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தது.

பாந்திரா மேற்கில் மாநில மந்திரியும் அந்த தொகுதி வேட்பாளருமாகிய ஆஷிஸ் செலார் காலையிலேயே குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். தாராவி வேட்பாளர் வர்ஷா கெய்க்வாட் குடும்பத்தினருடன் சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிடும் தமிழர்கள் கேப்டன் தமிழ்ச்செல்வன், கணேஷ் குமாரும் தங்களுக்குரிய வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப்போட்டனர்.இதேபோல மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா சயான் கோலிவாடா தொகுதியிலும், கவுன்சிலர் மாரியம்மாள் தாராவியிலும் வாக்களித்தனர்.

மாலை 5 மணி நிலவரப்படி மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 44.74 சதவீதம் வாக்குகள் பதிவு ஆகி இருந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 50 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 51.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் பலன் இல்லாமல் போய் உள்ளதையே இது காட்டுகிறது.

Next Story