படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வங்கிக்கடன் கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வங்கிக்கடன் கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2019 4:30 AM IST (Updated: 22 Oct 2019 7:11 PM IST)
t-max-icont-min-icon

படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க இருப்பதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயமாக வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்கிட தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வரும், படித்த வேலையில்லாத இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான சிறு தொழில்கள், வியாபாரம் மற்றும் சேவை தொழில்கள் தொடங்கிட மானிய கடனுதவி பெறும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் ஆண், பெண் இருவரும் குறைந்த பட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45–க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொழில் தொடங்க வங்கி மூலம் கடன் உதவி பெற வியாபாரத்துக்கும், சேவை சார்ந்த தொழில்களுக்கும் அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பரிந்துரைக்கப்படும். இதற்காக தமிழக அரசு மானியம், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இந்த திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் நேரடி விவசாயம் செய்ய இயலாது.

தகுதி உள்ள நபர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து 2 நகல்களில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களுடன் பொதுமேலாளர், மாவட்ட தொழில்மையம், கடலூர்–607001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம் கடன் உதவி பெற உள்ள பயனாளிகளுக்கு மேற்குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து தமிழக அரசின் மானிய உதவி பெற்று பயன்பெறலாம். வங்கி மேலாளர்கள் தங்கள் வங்கிகள் மூலம் வழங்கும் முத்ரா கடன் திட்டத்துக்கு மானிய கடன் உதவி தமிழக அரசு மூலமாக பெறலாம்.

மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை அறிய மாட்ட தொழில்மையத்தை 04142–290116 என்ற டெலிபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story