ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் துணிகரம்: அ.ம.மு.க. பிரமுகர்–வியாபாரி வீட்டில் 134 பவுன், ரூ.5½ லட்சம் கொள்ளை


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் துணிகரம்: அ.ம.மு.க. பிரமுகர்–வியாபாரி வீட்டில் 134 பவுன், ரூ.5½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 23 Oct 2019 4:00 AM IST (Updated: 22 Oct 2019 7:45 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அ.ம.மு.க. பிரமுகர்– வியாபாரி வீட்டில் 134 பவுன், ரூ.5½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் உள்ள ஆண்டாள்நகரில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார்(40). அ.ம.மு.க. பிரமுகர். இவர் தனது மைத்துனர் வீட்டு விசே‌ஷத்திற்காக தனது குடும்பத்துடன் பரமக்குடிக்கு சென்றிருந்தார். வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் பீரோவில் இருந்த 84 பவுன் நகை, ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிருஷ்ணன்கோவில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சந்தோஷ்குமார் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் இருந்தும் செயல்படாத நிலையில் உள்ளதால் போலீசார் அதை வைத்து துப்புதுலக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நம்பிநாயுடு தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 58). நெல் வியாபாரியான இவர் சென்னையிலிருந்து தீபாவளிக்காக ஊருக்கு வரும் தனது மகள் சத்தியப் பிரியாவை அழைக்க தனது மனைவி மகாலட்சுமியுடன் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் மாலை மதுரை சென்றார். மகளையும் மனைவியும் தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு முருகன் நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ஆகியோர் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். மேலும் தடவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே கிருஷ்ணன்கோவில் சீனிவாசன் நகர் இ.பி. அலுவலகம் பின்புறம் வசிக்கும் ராஜேஸ்வரி(48) என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். பொருட்கள் ஏதும் இல்லாததால் கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடி விட்டுச் சென்றுள்ளனர். இதன்பின்னர் கிருஷ்ணன்கோவில் பாலாஜி நகரில் வசிக்கும் எட்வின் நாகராஜ் என்பவர் வீட்டில் கதவை உடைத்து பீரோவில் பொருட்களை தேடியுள்ளனர். அங்கும் பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

ஒரே நாள் இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், கிருஷ்ணன்கோவில் பகுதியில் 4 இடங்களில் கொள்ளையடிக்க முயன்று அதில் 2 வீடுகளில் சுமார் 134 பவுன் நகை, ரூ.5½ லட்சம் கொள்ளை போன சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் ஏற்கனவே ரோந்து பணியில் தீவிரமாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த சாரல் மழை கொள்ளையர்களுக்கு சாதமாக அமைந்து விட்டது. சாரல் மழை பெய்ததால் இரவு நேரங்களில் இருக்கும் வழக்கமான நடமாட்டம் இல்லை. இதனை பயன்படுத்தி கொண்டு கொள்ளையர்கள் எளிதாக நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, தீபாவளி கொள்ளையர்களா அல்லது டவுசர் கொள்ளையர்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story