பெற்றோர்களின் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் - அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேச்சு


பெற்றோர்களின் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் - அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்களின் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் உயர்கல்வித்துறையின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 247 மாணவ- மாணவிகளுக்கு ரூ.37 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலகு சார்பில் 57 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த ஜெயலலிதாவால் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அரசு தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒரு பாடப்பிரிவில் 60 மாணவ- மாணவிகள் என 5 பாடப்பிரிவுகளில் 300 மாணவ- மாணவிகள் உள்ளனர். இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு என சேர்த்து மொத்தம் 900 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஏழை, எளிய மாணவர் களின் எதிர்கால நலன் கருதி 2013-2014-ம் ஆண்டு மடிக் கணினி வழங்கும் திட்டத்தினை ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுவரை இக்கல்லூரியில் பயிலும் 514 மாணவர்களுக்கு ரூ.77 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவ- மாணவிகள் மடிக்கணினியினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றி சமுதாயத்தில் போற்றுதலுக்குரிய மாணவர்களாக திகழவேண்டும்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 12 குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தின் வாயிலாக, 791 குழந்தை களுக்கு கல்வி, மருத்துவம், மறுவாழ்வு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அக்குழந்தைகளின் மறுவாழ்விற்காகவும், கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காகவும் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு அல்லது 18 வயது நிறைவடையும் வரை நிதி ஆதரவு திட்டத்திலிருந்து நிதி ஆதரவு தொகை பாதுகாப்புத்துறையின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலகு சார்பில் இன்று (அதாவது நேற்று) 57 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அக்பர்ஷெரீப், அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story