2 சிம்கார்டுகள் சிக்கியது: முருகனுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகள் 3 மாதம் ரத்து


2 சிம்கார்டுகள் சிக்கியது: முருகனுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகள் 3 மாதம் ரத்து
x
தினத்தந்தி 23 Oct 2019 4:45 AM IST (Updated: 22 Oct 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

முருகன் அறையில் செல்போனை தொடர்ந்து 2 சிம்கார்டுகளும் சிக்கியதால் அவருக்கு வழங்கப்படும் சிறை சலுகைகள் 3 மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். கோர்ட்டு உத்தரவின்படி நளினி-முருகன் சந்திப்பு 15 நாட்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி முருகன் தங்கியிருந்த உயர் பாதுகாப்புப்பிரிவில் உள்ள அறையில் செல்போன் நடமாட்ட சோதனை குழுவினர் நடத்திய திடீர் சோதனையில் ஆன்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஜெயிலர் ராஜேந்திரன் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது சிறையில் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் அதே பிரிவில் உள்ள வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து முருகன் தங்கியிருந்த அறையில் செல்போன் நடமாட்ட சோதனை குழுவினர் சோதனையிட்டனர். அதில், 2 சிம்கார்டுகள், ஹெட்போன் ஆகியவை சிக்கியது. அவற்றை குழுவினர் பறிமுதல் செய்து சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முருகன் அறையில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது அவரது அறையில் இருந்து அடுத்தடுத்து ஆன்ட்ராய்டு செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள், ெஹட்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறைத்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முருகன் தங்கியிருந்த அறையில் செல்போன், சிம்கார்டுகள், ஹெட்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதால் அவருக்கு சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முருகன் 3 மாதங்களுக்கு வக்கீலை தவிர உறவினர்கள் உள்பட வேறு யாரையும் சந்திக்க முடியாது. அதேபோன்று 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி-முருகன் சந்திப்பும் ரத்து செய்யப்படுகிறது. கடித போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story