மாவட்டம் முழுவதும் கனமழை: மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்து 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்து 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மோகனூரில் 2 வீடுகள் சேதம் அடைந்தன.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக மோகனூரில் 98 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
மோகனூர்-98, பரமத்திவேலூர்-75, திருச்செங்கோடு-47, நாமக்கல்-24, கலெக்டர் அலுவலகம்-19, ராசிபுரம்-18, சேந்தமங்கலம்-13, கொல்லிமலை-12, மங்களபுரம்-8, புதுச்சத்திரம்-6, எருமப்பட்டி-5, குமாரபாளையம்-4. மாவட்டத்தின் மொத்த மழையளவு 329 மி.மீட்டர் ஆகும்.
நாமக்கல் நகரில் நேற்றும் காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு சாரல்மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்து செல்வதை பார்க்க முடிந்தது.
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையெங்கும் மழைநீர் வழிந்தோடியது. இந்த கனமழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், நாமகிரிப்பேட்டை பகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை நல்ல மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் மழை நீரானது சேலம், கொண்டலாம்பட்டி, வழியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் கலந்து காவிரியை சென்றடைகிறது. தற்போது சேலம் பகுதியிலிருந்து நீர் வழிந்தோடும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் அதில் ஆகாயதாமரை படர்ந்து ஆங்காங்கே நீர் வெளியேறுவதுடன் சாக்கடை மற்றும் சாயக்கழிவுகளும் கலந்து மழைநீர் நுரையுடன் கருப்பு நிறமாக அதிக துர்நாற்றத்துடன் திருமணிமுத்தாற்றில் கலந்து செல்வதால் மதியம்பட்டி, கல்கட்டானூர், அக்கரைபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நீர் ஆதாரம் பாதித்ததுடன் விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. இதனால் அலவாய்பட்டி, நடுப்பட்டி, மதியம்பட்டி, சவுரிபாளையம் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 5 கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மதியம்பட்டி வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் பஸ்கள் மட்டுமன்றி விவசாய வேலைக்கு செல்பவர்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோகனூர் பகுதியில் இதுவரை இல்லாத அளவு நேற்று முன்தினம் 98 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதில் மோகனூர் முழுவதும் சாலைகளில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த கனமழையால் மோகனூரில் உள்ள மேட்டு தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது, இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு நிவாரணத்தொகை ரூ.4,100 வழங்கினார்கள்.
அதேபோல் தோட்டக்கார தெருவில் உள்ள பழனியப்பன் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து மேற்கொண்டு வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, இதுவரை மோகனூர் பகுதியில் இவ்வளவு மழை பெய்தது இல்லை. ஓரளவு மழை பெய்யும். இடி-மின்னல் இருக்கும். இந்த அளவுக்கு மழை பெய்தது இல்லை என்று கூறினர்.
Related Tags :
Next Story