பள்ளிபாளையம் அருகே, அழகு நிலைய பெண் ஊழியர் கொலையில் ரிக் உரிமையாளர் கைது
பள்ளிபாளையம் அருகே, அழகு நிலைய பெண் ஊழியர் கொலை வழக்கில் ரிக் வண்டி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மொளசி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி ஷோபனா (வயது 29). அழகு நிலைய ஊழியரான இவர் திடீரென மாயமானார்.
இந்த நிலையில் இவர் பள்ளிபாளையத்தில் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஷோபனா சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
மேலும் ஷோபனாவை யாராவது அங்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும், கள்ளக்காதல் விவகாரத்தில் இருந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்திய போலீசார், ஷோபனாவின் செல்போனுக்கு வந்த எண்களை வைத்து ஆய்வு நடத்தி வந்தனர்.
இதில் திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் சுரேஷ்குமார் (35) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஷோபனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
கைதான சுரேஷ்குமார், ஷோபனா வேலை பார்த்து வந்த அழகு நிலையத்தின் மேல் மாடியில் ரிக் வண்டி ஆபீஸ் வைத்து நடத்தி வந்தார். அடிக்கடி சந்தித்ததால் அவருக்கும், ஷோபனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து ஷோபனாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற சுரேஷ்குமார், பள்ளிபாளையத்தில் வைத்து சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Related Tags :
Next Story