வாழப்பாடி அருகே, பஸ்கள் மோதல்; 13 பயணிகள் படுகாயம்
வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதிக்கொண்ட விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
வாழப்பாடி,
சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலையில் தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ்சை வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 45) என்பவர் ஓட்டினார்.
முத்தம்பட்டி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை அந்த பஸ் கடந்து சென்றது. அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக தனியார் பஸ் மீது மோதியது.
இதில் தனியார் பஸ்சின் பின்புறத்தில் பக்கவாட்டு பகுதியில் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில், தனியார் பஸ்சில் பயணம் செய்த வைத்தியகவுண்டன்புதூர் ஆனந்த்(31), நரசிங்கபுரம் கருப்பையா(48), மேட்டுடையார்பாளையம் கார்த்திக்ராஜன்(20), ஒதியத்தூர் பகுதியை சேர்ந்த ராேஜஷ் கண்ணா(30), ராஜா (42), ஆத்தூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்(55), சுரேஷ்(34), கெங்கவல்லி பரூக் அலி(45), பழனியாபுரம் பச்சமுத்து (68), வாழப்பாடி ரிஷி (19), பெரம்பலூர் தாலுகா மேலப்புளியூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(40), முத்தம்பட்டி சிவசங்கர் (19), உளுந்தூர்பேட்டை தேங்குளம் பகுதியை சேர்ந்த சொர்ணாம்பாள் (83) ஆகிய 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக விபத்து நடந்த இடத்திற்கு, வாழப்பாடி தாசில்தார் ஜாகீர் உசேன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசில் தனியார் பஸ்சில் பயணம் செய்த மஞ்சினியை சேர்ந்த பாஸ்கர் (54) என்பவர் புகார் கொடுத்தார். அதில் தனியார் பஸ் டிரைவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் தனியார் பஸ் டிரைவர் செந்தில் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story