நரிக்குடி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து காவலுக்கு சென்ற 2 விவசாயிகள் படுகாயம்


நரிக்குடி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து காவலுக்கு சென்ற 2 விவசாயிகள் படுகாயம்
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 23 Oct 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றிகள் கடித்து காவலுக்கு சென்ற 2 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள நாலூர் உழத்திமடை, கட்டனூர், அழகாபுரி, சொக்கனேந்தல், மறைக்குளம், பனைக்குடி, இசலி உள்பட பல கிராம விவசாயிகள் கரும்பு, நிலக்கடலை, மக்காச்சோளம், நெல் போன்வை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் வந்து சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் ஒன்று சேர்ந்து நிலக்கடலை மற்றும் பல பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் காவல் காக்கின்றனர்.

இந்த நிலையில் நாலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 23), கணபதி என்பவரது மகன் முத்துப்பாண்டி (25) ஆகிய இருவரும் தங்களது வயலுக்கு காவலுக்கு செல்வதற்காக நாலூர் கண்மாய் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது கண்மாய்க்குள் நின்று கொண்டிருந்த காட்டுப்பன்றிகள் விவசாயிகள் ராஜ்குமாரையும், முத்துப்பாண்டியையும் விரட்டின. மேலும் அவை முத்துப்பாண்டியின் கை, கால் போன்ற பகுதிகளில் கடித்தன. இதைக்கண்ட ராஜ்குமார் பன்றிகளை விரட்ட முயன்றபோது அவரின் கைகளையும் கடித்தன.

இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்து பலர் வந்து காட்டுப்பன்றிகளை விரட்டி அடித்தனர்.

படுகாயமடைந்த முத்துப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ராஜ்குமார் அருப்புக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தப் பகுதிகளில் அதிகமானோரை காட்டுப்பன்றிகள் கடித்து உள்ளன. விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே விவசாய நலனில் அக்கறை கொண்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story