மணப்பாடு கருமேனி ஆற்றில் கிடந்த 8 சாமி சிலைகள் மீட்பு
மணப்பாடு கருமேனி ஆற்றில் கிடந்த 8 சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்.
குலசேகரன்பட்டினம்,
மணப்பாடு கருமேனி ஆற்றில் கிடந்த 8 சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்.
சாமி சிலைகள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாட்டில் கருமேனி ஆறு கடலில் சங்கமிக்கிறது. இங்குள்ள கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் கடல் முகத்துவாரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பழமைவாய்ந்த 4 சாமி சிலைகள் தண்ணீரில் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, உடன்குடி வருவாய் ஆய்வாளர் ராஜதுரை, கிராம நிர்வாக அலுவலர்கள் நடராஜன், சரவணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, முகத்துவாரம் தண்ணீரில் இறங்கி, சாமி சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு தண்ணீரில் கிடந்த 2 கருப்பசாமி சிலைகள், காளியம்மன், சுடலைமாட சாமி, நாராயண சாமி, முருகபெருமான் உள்ளிட்ட 8 சாமி சிலைகளை மீட்டனர்.
போலீசார் விசாரணை
அந்த சிலைகள் அனைத்தும் காங்கிரீட்டால் செய்யப்பட்டவை என்பதும், பெரும்பாலான சிலைகள் சேதம் அடைந்தும், வர்ணப்பூச்சு பெயர்ந்து இருந்ததும் தெரியவந்தது. அவற்றை உடன்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவில்களில் திருப்பணிகள் நடத்தி, புதிய சிலைகளை நிறுவும்போது, சேதம் அடைந்த பழைய சிலைகளை ஆற்றில் விட்டு செல்வது வழக்கம். அவ்வாறு பழைய சிலைகளை கருமேனி ஆற்றில் விட்டு சென்று இருக்கலாம்“ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பாடு கருமேனி ஆற்றில் சாமி சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story