ஆத்தூர் அருகே பலத்த காற்றுடன் மழை: மரங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ஆத்தூர் அருகே பலத்த காற்றுடன் மழை: மரங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 3:45 AM IST (Updated: 23 Oct 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆறுமுகநேரி, 

ஆத்தூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த காற்றுடன் மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. அப்போது ஆத்தூர் அருகே கைலாசபுரம் வாய்க்கால் கரையில் நின்ற பழமைவாய்ந்த அரச மரத்தின் தண்டு பகுதி இரண்டாக பிளந்து சாய்ந்தது.

அப்போது அங்குள்ள மின்கம்பத்தின் உயர்அழுத்த மின்கம்பிகளில் மரக்கிளைகள் விழுந்து அமுக்கியதால், மின்கம்பிகள் அறுந்தன. மேலும் இரண்டாக பிளந்த மரத்தின் ஒரு பகுதி சாலையிலும், மற்றொரு பகுதி வாய்க்காலிலும் கிடந்தது. இதனால் ஆத்தூர்-புன்னக்காயல் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்தடை

இதுகுறித்து ஆறுமுகநேரி மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்து விட்டு, சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அறுந்த மின்கம்பிகளை சீரமைத்தனர். இதனால் கைலாசபுரம், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதேபோன்று ஆத்தூர்-குரும்பூர் ரோடு மேல ஆத்தூர் வாலிபர் சங்க அலுவலகம் அருகில் நின்ற இலவம் பஞ்சு மரமும் பலத்த காற்றுக்கு சாலையில் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள், சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story