வானவில் : மீண்டும் வருகிறது பஜாஜ் சேடக்


வானவில் : மீண்டும் வருகிறது பஜாஜ் சேடக்
x
தினத்தந்தி 23 Oct 2019 3:53 PM IST (Updated: 23 Oct 2019 3:53 PM IST)
t-max-icont-min-icon

இந்திய சாலைகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜாவாக பவனி வந்த பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் வருகிறது. ஆனால் இம்முறை பேட்டரி ஸ்கூட்டர் அவதாரமெடுத்து இந்திய சாலைகளில் சீறிப்பாய வருகிறது.

ஏறக்குறைய 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பஜாஜ் சேடக் மீண்டும் வர உள்ளது, ஸ்கூட்டர் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் பேட்டரி ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டாலும், வர்த்தக ரீதியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேடக் ஸ்கூட்டர் கிடைக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்போதே வாகனத்தின் விலையையும் அறிவிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 4 கிலோவாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஐ.பி.67 லித்தியம் அயன் பேட்டரி அதுவும் கழற்றி மாட்டும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் எகானமி மற்றும் ஸ்போர்ட் என இரண்டு வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன. வண்டியை பின்நோக்கி நகர்த்தும் ரிவர்ஸ் வசதியும் உள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங் களுக்கு அளிக்கப்படும் பேம்2 சலுகை இந்த ஸ்கூட்டருக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. இந்த ஸ்கூட்டரில் இன்பில்ட் சார்ஜர் உள்ளது. வீடுகளில் உள்ள மின்சாரம் மூலம் இதை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது.

மிகவும் அழகிய தோற்றப் பொலிவோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. முன் சக்கரத்துக்கு டிஸ்க் பிரேக் வசதி, அலாய் சக்கரங்கள், எல்.இ.டி. முகப்பு விளக்கு என அசத்துகிறது. இதன் இன்டிகேட்டர் நவீன ஆடி கார்களில் உள்ளதைப் போன்று சுழன்று ஒளிவீசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக இது சாவியின்றி செயல்படக் கூடியது.

இதை செயலி (ஆப்) மூலம் மட்டும்தான் இயக்க முடியும். முன்புறம் பொருட்கள் வைக்கும் பெட்டி நவீன டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் ஸ்கூட்டர்களில் பெரும்பாலானவை பைப்ரால் ஆன மேல் பகுதியைக் கொண்டுள்ளன.

ஆனால் பஜாஜ் சேடக் உலோகத்தால் ஆன பிரேம், பக்கவாட்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அடுத்த இன்னிங்ஸை தொடங்கப் போகிறது பஜாஜ் சேடக் பேட்டரி ஸ்கூட்டர்.

Next Story