எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிய பெண்ணை தள்ளிவிட்ட வடமாநில பயணிகள் - ரெயிலை நிறுத்தி போராட்டம்


எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிய பெண்ணை தள்ளிவிட்ட வடமாநில பயணிகள் - ரெயிலை நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:15 AM IST (Updated: 23 Oct 2019 9:26 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிய பெண்ணை வடமாநில பயணிகள் தள்ளிவிட்டனர். இதனால் ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம், 

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து அசாம் மாநிலம், கவுகாத்தி அருகே உள்ள சில்சார் பகுதிக்கு அரோனை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு ரெயில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் மற்ற ரெயில்கள் தாமதமாக வந்ததால் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக ரெயில் பெட்டியில் ஏறினார்கள்.

ரெயில் என்ஜினில் இருந்து வரிசையாக முன்பதிவு செய்யப்பட்ட 2 பெட்டிகளில் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் திறந்து இருந்த மற்றொரு முன்பதிவு பெட்டியில் பயணிகள் ஏறினார்கள். அப்போது ரெயில் மெதுவாக புறப்பட்டது. என்ஜினில் இருந்து 4-வது முன்பதிவு பெட்டியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் ஏறினார்.

இதனை பார்த்த பெட்டியில் இருந்த வடமாநில பயணிகள் சிலர் அந்த பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அந்த பெண் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் அவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதை பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண் கீழே விழுந்ததால் உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் நின்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் பெட்டியில் ஏறி வடமாநில பயணிகளிடம் வாக்குவாதம், போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ரெயில் பயணிகள் சங்க பொது செயலாளர் ஜெ.கே.ரகுநாதன் மற்றும் பயணிகள் கூறியதாவது:-

சென்னைக்கு காலையில் வேலைக்கு செல்லும் நாங்கள் ரெயில்கள் சிறிது நேரம் காலதாமதமாக வந்தால் கூட எங்களால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. ஆகவே அரக்கோணம் வழியாக செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. அவ்வாறு செல்வதால் வேலைக்கு சரியாக சென்றுவிட முடிகிறது. அவ்வாறு வேலை அவசரத்தில் முன்பதிவு பெட்டியில் ஏறிய பெண்ணிடம் வடநாட்டு பயணிகள் பொறுமையாக முன்பதிவு செய்த பெட்டியில் ஏறாதீர்கள். அடுத்த நிறுத்தம் வந்ததும் வேறு பெட்டியில் மாறி கொள்ளுங்கள் என்று கூறி இருக்கலாம். அதை விட்டுவிட்டு பெண் பயணியை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டது கண்டனத்திற்குரிய செயல் ஆகும். ஆகவே பெண் பயணியை தள்ளிவிட்ட வடமாநில பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனையடுத்து அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். அதன் பின்னர் போராட்டம் நடத்திய பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அரோனை எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் காலதாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ், ஜூப்ளியில் இருந்து சென்னை செல்லும் ஜூப்ளி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், கேரளாவில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் காலதாமத்திற்கு பின்னர் ஒவ்வொன்றாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story