நில இழப்பீடு தொகை வழங்காததால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனாக்களால் பரபரப்பு


நில இழப்பீடு தொகை வழங்காததால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனாக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 23 Oct 2019 9:32 PM IST)
t-max-icont-min-icon

ரூ.5 கோடி நில இழப்பீடு தொகை வழங்காததால் வேலூர் கலெக்டர் காரை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டில் 2½ ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் கடந்த 2003-ம் ஆண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.42 லட்சம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த தொகை போதாது என்று கூடுதல் தொகை வழங்கக்கோரி சீனிவாசன் மற்றும் ஜெயலட்சுமி கடந்த 2003-ம் ஆண்டு ஆம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சில மாதங்களில் வேலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்காமல் காலம் கடத்தி வந்தது. அதைத்தொடர்ந்து சீனிவாசன் நில இழப்பீடு தொகை உடனடியாக வழங்கும்படி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இழப்பீடு தொகைக்கு கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து 2 முறை கோர்ட்டு அமீனாக்கள் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இழப்பீடு தொகை வழங்க கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். அதன்பேரில் கோர்ட்டு அமீனாக்கள் ஜப்தி முயற்சியை கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் கால அவகாசம் முடிந்த பின்னரும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து நேற்று வேலூர் கோர்ட்டு அமீனாக்கள் 5 பேர் கொண்ட குழுவினர் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்களை ஜப்தி செய்வதற்காக நேற்று மதியம் 12 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேரின் கார்களும் இல்லை.

அதைத்தொடர்ந்து கோர்ட்டு அமீனாக்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க சென்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் எந்த பொருட்களையும் ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து கோர்ட்டு அமீனாக்கள் கூறுகையில், ‘நில இழப்பீடு தொகை ரூ.5 கோடி கொடுக்காததால் கலெக்டர் அலுவலக பொருட்களை 3-வது முறையாக ஜப்தி செய்ய வந்துள்ளோம். கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்களை ஜப்தி செய்ய வந்தோம். கார்கள் இல்லாததால் பிற பொருட்களை ஜப்தி செய்ய முயன்றோம். ஆனால் இங்குள்ள ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்துகிறார்கள். எனவே அடுத்த முறை போலீஸ் பாதுகாப்புடன் வந்து ஜப்தி செய்வோம்’ என்றனர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story