மாவட்டம் முழுவதும் 927 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு - கலெக்டர் தகவல்


மாவட்டம் முழுவதும் 927 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:30 PM GMT (Updated: 23 Oct 2019 4:07 PM GMT)

வேலூர் மாவட்டம் முழுவதும் 927 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம், 

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரத்த பரிசோதனை செய்ய காத்திருந்தவர்களிடம் தங்கள் பகுதியில் சுகாதார பணிகள் நடைபெறுவது குறித்தும், டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடுகளில் சோதனை செய்கிறார்களா?, கொசு மருந்து அடிக்கப்படுகிறதா? எனவும் விசாரித்தார்.

அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவு, பொதுப்பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது சுகாதார பணிகள் மாநில இணை இயக்குனர் தேவபார்த்தசாரதி, மாவட்ட துணை இயக்குனர் சுரேஷ், தாசில்தார் சாந்தி, மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், பொறியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் டெங்கு நோய் பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை 927 பேருக்கு டெங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந் தேதி முதல் இதுவரை 246 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் தமிழக எல்லையோரம் உள்ளது. இதனால் பக்கத்து மாநிலத்தில் இருந்தும் நோய் தாக்கம் வருகிறது. அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்லும் சிலருக்கு அங்கிருந்து நோய் பாதிப்பு ஏற்பட்டு அதனால் அவர்கள் வசிக்கும் பகுதியிலும் இந்த நோய் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 117 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் டெங்குக்கு தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குடியாத்தத்தில் தினசரி 2,500 முதல் 3,500 பேர் வரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு 130 படுக்கைகள் உள்ளது. ஆனால் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்திட அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருபவர்களின் 21 வகையான பரிசோதனை விவரங்களை சேகரித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் போலி டாக்டர்களிடம் செல்ல வேண்டாம். அங்கீகாரம் பெற்ற டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களின் பட்டியலை மாவட்ட கலெக்டரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக வேலூர் மற்றும் வாணியம்பாடி பகுதி டாக்டர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் கொசு தடுப்பு பணியில் 1,936 பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story