சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார்


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:00 AM IST (Updated: 23 Oct 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு, 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து அவர் விடுதலையானார்.

13 நாட்கள் விசாரணை

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை கடந்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவரை தங்களின் காவலில் வைத்து 13 நாட்கள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கோர்ட்டு அனுமதியின் பேரில் அமலாக்கத்துறையினர் சிறையில் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா, சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி., லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என். ராஜண்ணா உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நிபந்தனை ஜாமீன்

இதற்கிடையே டி.கே.சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து டி.கே.சிவக்குமார், டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த வாரம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவை பிறப்பித்தது. அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது. பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், தலா ரூ.25 லட்சம் மதிப்புள்ள பாண்டு மற்றும் 2 பேர் தனிநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும், அமலாக்கத்துறையினர் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

மிகுந்த மகிழ்ச்சி

மேலும் தீர்ப்பில், ஜாமீன் வழங்கினால் டி.கே.சிவக்குமார் நாட்டை விட்டு ஓடிவிடுவார் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ளப்பட்டு ஜாமீன் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு பிறகு டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து டி.கே.சுரேஷ் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “டி.கே.சிவக்குமாருக்கு 50 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனையை நாங்கள் பின்பற்றுவோம். அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். நாங்கள் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம். இந்த வழக்கில் இருந்து விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது“ என்றார்.

வெளியே வந்தார்

ஜாமீன் கிடைத்த தகவலை அறிந்த டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரது ஆதரவாளர்கள் ராமநகர், கனகபுராவில் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெல்லியில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். கோர்ட்டு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றிய பிறகு, டி.கே.சிவக்குமார் நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

சோனியா காந்தி ஆறுதல்

முன்னதாக நேற்று காலை டெல்லியில் உள்ள திகார் சிறையில் டி.கே.சிவக்குமாரை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சோனியா காந்தி, இந்த கடினமான தருணத்தில் காங்கிரஸ் உங்கள் பக்கம் இருப்பதாகவும், சட்ட போராட்டம் நடத்துங்கள், அதற்கு பக்கப்பலமாக இருப்போம் என்றும் தைரியம் கூறியதாக கூறப்படுகிறது.

Next Story