குன்னூர் அருகே, பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
குன்னூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்,
குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி கிராமத்தில் வசிப்பவர் மாசியம்மாள் (வயது60). இவரது கணவர் செல்வராஜ் இறந்து விட்டார். எனவே மாசி யம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை மாசியம்மாள் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட மாசியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மாசியம்மாள் அருவங்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் மூதாட்டியின் வீடு புகுந்து கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க அருவங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படை போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வெளியூர் நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர். வீடுகள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே நடந்த கொள்ளை சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story