கூடலூர் அருகே, ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
கூடலூர் அருகே காட்டு யானை ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் பஜாருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்துகிறது. இதுதவிர நள்ளிரவில் வீடுகளை முற்றுகையிட்டு சேதப்படுத்தி வருகிறது. இதனால் மாலை நேரம் ஆனவுடன் காட்டு யானைகளிடம் சிக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வேகமாக செல்லும் நிலை காணப்படுகிறது.
வனத்துறையினர் விரட்டினாலும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடிய வில்லை. இந்த நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சியில் காட்டு யானை ஒன்று ரேஷன் கடைகளை குறி வைத்து உடைத்து வருகிறது. பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தின்று செல்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு போஸ்பாரா, ராக்வுட் ரேஷன் கடைகளை அந்த காட்டு யானை உடைத்ததுடன், அங்கு வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தின்றது.
இதில் ராக்வுட் ரேஷன் கடையை 2 முறை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேவர்சோலை போலீஸ் நிலையம் பின்பக்கம் உள்ள ரேஷன் கடையை நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை முற்றுகையிட்டது. தொடர்ந்து கடையின் ஷட்டரை உடைத்தது. பின்னர் தும்பிக்கையை கடைக்குள் நுழைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களின் மூட்டைகளை தூக்கி வெளியே வீசி அட்டகாசம் செய்தது. தொடர்ந்து அப்பகுதியில் வெகுநேரம் நின்று அரிசி உள்ளிட்டவற்றை தின்றது.
பின்னர் அந்த காட்டுயானை கூடலூர்- தேவர்சோலை சாலையில் நடந்து வந்தது. இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் அதிகாலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. இதனால் காட்டு யானை சாலையில் நடந்தவாறு பஜாருக்குள் நுழைந்தது. பின்னர் சுல்தான்பத்தேரி சாலை வழியாக தனியார் தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து தேவர்சோலை பகுதி மக்கள் கூறியதாவது:-
வழக்கமாக காட்டு யானை வீடுகளை சேதப்படுத்துவது வாடிக்கை. தற்போது ரேஷன் கடைகளை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று வருகிறது. தேவர்சோலை பகுதியில் கடந்த சில வாரங்களாக 4 முறை ரேஷன் கடைகளை காட்டு யானை உடைத்து விட்டது. ரேஷன் கடைகளை சேதப்படுத்தும் காட்டு யானையை வனத்துக்குள் வெகுதூரம் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அத்தியாவசிய பொருட்களை தின்று பழகி விட்ட காட்டு யானை தொடர்ந்து ரேஷன் கடைகளை உடைக்கும் செயல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story